திரௌபதி அம்மன் கோவில் சங்கொலிக்குப்பம்
சக்தி வாய்ந்த தெய்வங்கள் என தமிழ்நாட்டில் கிராமங்களில் கொண்டாடப்படும் தெய்வங்களில் திரௌபதி அம்மன் தெய்வமும் ஒன்று. கிராமத்தில் வாழும் பாமர மக்களுக்கு திரௌபதி அம்மன் பக்தியும், மஹா பாரத கதையும் மிகவும் பிரசித்தம். தெய்வ பக்தியும் பண்பாடும் , திருவிழா காலங்களில் மக்களின் கொண்டாட்டமும், உறவினர்களின் வருகையும் ஊரே குதூகலமாக இருக்கும்.
இப்படி தமிழகத்தில் பெரும்பாலான கிராமங்களில் திரௌபதி அம்மன் கோவில் கொண்டு இருந்தாலும் சங்கொலிக்குப்பத்தில் கோவில் கொண்டிருக்கும் திரௌபதி அம்மனை அந்த ஊர் மக்கள் மட்டும் அல்ல சுற்றுப்புறத்தில் உள்ள 15-20 கிராமங்களில் உள்ள மக்கள் போற்றியும், கொண்டாடியும் வருகிறார்கள் .
அந்த கோவிலின் வரலாறு மற்றும் சிறப்புகளை தெரிந்து கொள்ள உங்களையும் திரௌபதியம்மன் கோவிலுக்கு அழைத்துசெல்கிறேன் .
ஏறக்குறைய சுமார் 30 ஏக்கர் மணற்பாங்கான நிலப்பரப்பில் கோயில் குளம், தென்னந்தோப்பு , மாமர தோப்பு என கோவில் கொண்டு குடியிருக்கும் தெய்வம் திரௌபதி அம்மன்.
இந்தக்கோவிலை சங்கொலிக்குப்பம் அருகில் உள்ள சேடப்பாளையம் என்ற ஊரை குடியிருப்பாய் கொண்ட தெய்வத்திரு சாமி நாயுடு அவர்களின் சந்தததியினர் பரம்பரை தர்மகர்த்தாவாக இருந்து பராமரித்து வருகிறார்கள் .மணியக்காரர் குடும்பம் என்றால் சுற்று வட்டார கிராம மக்களுக்கு தெரியும் . அவர்கள் குடும்பத்திற்கு சேடப்பாளையம் முதல் சங்கொலிக்குப்பம் வரை விவசாய நிலம் உள்ளது.சங்கொலிகுப்பத்திலும் விவசாய நிலங்கள் உள்ளது.
தர்மகர்த்தா என்றால் அதற்க்கு பொருத்தமானவர் தெய்வத்திரு சாமி நாயுடு அவர்கள் தான் . முகத்தில் அவ்வளவு தேஜஸ் . எபபோதும் புன்முறுவலுடன் இருப்பார் . கோவில் திருவிழா நாட்களில் முழுவதும் அவர் கோவிலில் தான் இருப்பார் .
கோவிலுக்கு வந்து அம்மனை வணங்குபவர்கள் வெளியில் வந்து தர்மகர்த்தாவையும் கும்பிட்டு செல்வார்கள். திருவிழாவில் தேருக்கு முன் அவர் செல்கிறார் என்றால் பெரிய கூட்டம் சுவாமி ஊர்வலத்தில் செல்லும்.
பூஜைகள் மற்றும் திருவிழாவை பற்றி அறிய அடுத்த பதிவுகளை பார்க்கவும்.