Thursday, June 25, 2020

சென்ற ஆண்டு நடைபெற்ற திருவிழாவின் சில காட்சிகள்


சங்கொலிக்குப்பம் திரௌபதி அம்மன் கோவில் திருவிழா என்றால் சுற்று புறத்திலுள்ள அனைத்து ஊர்களிலிருந்தும் பக்தர்கள் கூடுவார்கள் என்று முன்னமே கூறியிருக்கிறேன்.அந்த சம்பவத்தின் ஒரு பக்க காட்சிதான் கீழே கொடுக்கப்பட்டுள்ள படம். இந்த போட்டோ தீ மிதி அன்று எடுக்கப்பட்ட்து.இது அங்கு கூடியிருந்தோரின் ஒரு பகுதி ஆகும். இன்னும் மற்ற மூன்று புறங்களிலும் மக்கள் கூட்டம் இது போல் காணப்படும். 
\



திருவிழா பற்றி அதன் விவரங்களை சற்று விரிவாக பார்ப்போம். ஒவொரு ஆண்டும் வைகாசி மாதம்  அமாவாசையில் செவ்வாய்க்கிழமை அன்று கொடியேற்றி பௌர்ணமி வெள்ளிக்கிழமை அன்று தீ  மிதி நடக்கும்படி திருவிழா நடத்தப்படும். கொடி கட்டுவதற்கு முன்பு தர்மகர்த்தா மற்றும் ஊர் பெரியவர்கள் கூடி அம்மனிடம் உத்தரவு  கேட்பார்கள் . சில சமயம் உத்தரவு  தர தாமதிக்கலாம். அப்படி தாமதித்தால் ஏதாவது அசம்பாவிதம் நடக்கும் என்பது நம்பிக்கை.

இந்த கோவில்  திருவிழா 10 நாள் பாரதம் 8 நாள் திருவிழா என 18 நாள் நடைபெறும். 19ம் நாள் தெப்பத்திருவிழா நடைபெறும். முதல் 10 நாட்கள் கோவிலில் பாரதம் படிப்பார்கள் . அடுத்த 8 நாட்கள் திருவிழா நடை பெறும் . செவ்வாய்க்கிழமை கொடியேற்றம் அன்று காப்பு கட்டுதல் நடைபெறும். அன்று மாலை கூழ் ஊற்றி கொடியேற்றி காப்பு கட்டுவார்கள். கோவில் பூசாரிகள், ஊழியர்கள், தர்மகர்த்தா , முக்கியஸ்தர்கள் என அனைவரும் காப்பு கட்டி கொள்வார்கள். அன்று முதல் தெப்பத்திருவிழா அன்று காப்பு களையும் வரை விரதம் இருக்க வேண்டும். 

கொடி கட்டியவுடன்  50 ஆண்டுகளுக்கு முன்பு எல்லாம் ஊரில் கொண்டாட்டம் தான் இருக்கும் . கோவில் வேலைக்கு வீட்டுக்கு ஒருவர் செல்வார்கள். ஒரு தென்னை மரத்திற்கு 2 மட்டை வீதம் வெட்டப்படும். அந்த மட்டைகள் எல்லாம் ஊர் மக்கள் கூடி 7 நாட்களுக்குள் கீற்று முடைவார்கள். பிறகு எல்லாரும் சேர்ந்து பந்தல் போடுவார்கள். அந்த பந்தல் அமைப்புதான் கோவில்முகப்பில் இருப்பது. அது தற்ப்போது காலப்போக்கில் மாறி ஊர் மக்கள் ஒத்துழைப்பு முன் போல் இல்லாததால் கோவில்  சார்பில் தகரத்தில் போடப்படுகிறது. இது ஒன்றே 50 வருடத்தில் நமது ஒற்றுமையும் கலாச்சாரமும் எப்படி மாறி விட்டது என்பதை காட்டுகிறது.

இங்கு இன்னுமொரு சிறப்பு கொடி கட்டியவுடன் குறைந்தது 3 முறை மழை பெய்து மணல் வெளியை சூடு தனிய செய்துவிடும் . இது பக்தர்கள் வந்து புழங்கவும், கோடை காலத்தில் காற்றோட்டமாக படுத்துறங்கவும் தெய்வத்தால் செய்யப்படும் ஏற்பாடு. பெரும்பாலும் ஊர் மக்கள் பாயுடனும், படுக்கை விரிப்புடனும் தான் கூத்து மேடைக்கு வருவார்கள்.

10 ம் நாள் வெள்ளிக்கிழமை முதல் நாள் திருவிழா அன்றே ஊர் களை  கட்டிவிடும். பெரிய பந்தல் , கோவில் பின் புறம் பக்க வாட்டில் எல்லாம் தவிர முன்புறம் வலப்பக்கம், இடப்பக்கம் எல்லாம் வரிசையாக கடைகள் அமைப்பார்கள். ஜவுளிக்கடைகள், வீட்டு உபயோக கடைகள், வளையல் கடைகள், குழந்தைகள் விளையாட்டு பொருள்கள், பழக்கடைகள், தேநீர்க்கடைகள், சிறு சிறு ஓட்டல்கள், மிட்டாய்கடைகள் இப்படி  எல்லப்பொருள்களும் அந்த திருவிழாவில் கிடைக்கும். சிறுவர்கள் விளையாடி மகிழ எல்லாவித ராட்டினங்களும் இயங்கும்.

ஆரம்பத்தில் பெரிய திடலில் சூது பெரிய அளவில்நடந்தது . பெரிய அளவில் பணம் புரண்டு கொண்டு இருந்தது . விவசாயிகள் நிறைய பேர் அதிக அளவில் பணத்தை இழந்து இருக்கிறார்கள் . பிறகு காலப்போக்கில்  பல கட்டுப்பாடுகளினால் சூது ஒழிக்கப்பட்டுவிட்டது. சிறியவர்களுக்கு லங்கற்கட்டை என்ற விளையாட்டு ஒரு புறம் நடக்கும், அதுவும் ஒரு சூது தான்.

இப்படியாக முதல்நாள் திருவிழா களை  கட்டும். முதல் நாள் கரக திருவிழா. கோவிலில் 2 கரகம் அலங்காரம் செய்வார்கள். ஒன்று சக்தி கரகம் மற்றொன்று ஆண் கரகம். சக்தி கரகம் ஆண் கரகத்தைவிட உயரமானது. அந்த 2 கரகத்தையும் 2 குடும்பத்தினர் வழி வழி யாக எடுத்து  வருகிறார்கள். அம்பிகையின் அருள்,  அந்த 2 குடும்பத்திலும் படி படியாக ஆண் பிள்ளைகள் அருளியிருக்கிறர்கள். இது ஒரு அதிசயம்தான்.  அம்பிகையின் அருளுக்கு அளவேது. கரக திருவிழா பார்க்க கூட்டம் பெரிய அளவில் வரும்.  அம்பிகைக்கு ஆரத்தி காட்டி சுவாமிகள் உள்ளிருந்து தேரில் கொண்டுவந்து எழச்செய்யப்படும்.




ஒவ்வொரு நாளும் 2 கரகம் , அலங்காரத்தேரில் திரௌபதி அம்மன் , அர்ச்சுனன் மூர்த்திகள்  இருபுறமும் , கிருஷ்ண பரமாத்மா நடுவிலும் அலங்காரம் செய்யப்பட்டு ஊர் சுற்றி வரும் . 10 மணிக்கு ஊர்வலம்  ஆரம்பித்து சுவாமி கோவில் வந்தடையை  இரவு 1 மணி ஆகும். 

கரகம் மிகவும் நேர்த்தியாக அமைக்கப்பட்டு முழுவதுமாக முல்லைப்பூ சுற்றப்படும். கீழே ஒன்றரை அடி அளவிற்கு பூ சரம் தொங்க விடுவார்கள். கரகத்தின் உச்சியில் வெள்ளிக்கிளி வைக்கப்பெற்றிருக்கும். பார்க்க மிகவும் அழகாகவும் சான்னியத்துடனும் இருக்கும். கற்ப்பூர ஆரத்தி பூஜை முடிந்தவுடன் மூலஸ்தானத்திலிருந்து பிரம்பு எடுத்துவந்து அன்றைய உபயதாரர்கள் தர்மகர்த்தா சேர்ந்து கரகத்தை உள்  பிரகாரத்தில்  3 சுற்று  சுற்றி வந்து அதற்குரிய பூசாரியின் தலையில் வைப்பார்கள். கூடவே சிலம்பும் இருக்கும் . கிரகமும் சிலம்பும் ஆடும்போது பார்க்க தெய்வீகமாக இருக்கும். முதல் திருவிழா அன்றும் அதோடு வியாழக்கிழமை திருக்கல்யாணம் அன்றும் ஊரில் உள்ளவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு அவர்கள் வீட்டின் எதிரில் கரகத்தை நிறுத்தி சல்லடை விளக்கு நேர்த்திக்கடன் செய்வார்கள். குழந்தைகளுக்கு புது சட்டை துணிமணிகள் போட்டு கழுத்தில் மாலை போட்டு ஒரு இரும்பு சல்லடையில் சிறிது சிறிதாக மாவிளக்கு வரிசையாக வைத்து அத்துணை விளக்குகளையும் ஏற்றி அந்த சல்லடையை குழந்தைகள் தலையில் வைத்து கரகத்தை மூன்று சுற்று சுற்றி அம்மனுக்கு நேர்த்தி கடன் செய்வார்கள்.  ஒவ்வொருவீட்டிலும் உறவினர்கள் கூட வந்திருந்து இந்த நேர்த்திக்கடன் செய்வார்கள். அதனால் ஜவுளி வியாபாரம் அமோகமாக இருக்கும். ஒவ்வொரு நாள் திருவிழாவிலும் தெருவில் ஒவொரு வீட்டின் எதிரே கூட்டி நீர் தெளித்து கோலமிட்டு வைப்பார்கள். அந்த கோலத்தின் மீது தான் தேர் வந்து நிற்கும். கரகம் நிற்கும்.

ஒவ்வொரு நாள் திருவிழாவிற்கும் ஒவ்வொரு உபயதாரர்கள் உண்டு. 


சுவாமி ஊர்வலம் முடிந்தவுடன் வாண  வேடிக்கை முடிந்து விடியும் வரை தெருக்கூத்து கோவில் எதிரே நடைபெறும். ஒவ்வொரு வருடமும் பார்த் திருந்தாலும் அதெற்க்கென்று பெரும் திரள் பக்தர்கள் உண்டு. விடிந்துதான் வீடு திரும்புவார்கள்.

இப்படியாக முதல் நாள் திருவிழா முடிந்தவுடன் சனிக்கிழமை, ஞாயிறு, மற்றும் திங்கள் கிழமை வரை ஓரளவு  வெளியூர் கூட்டத்துடன் திருவிழா  நடைபெறும். ஒவ்வொரு நாளும் வேறு வேறு தேர் அலங்காரம். செவ்வாய்க்கிழமை முதல் திருவிழா களை  கட்டும். செவ்வாய்க்கிழமை தெருவடைச்சான். தெருக்களில்  மரக்கிளைகள் வெட்டப்பட்டு தெரு அகலப்படுத்தப்படும். மின் இணைப்புகள் அகற்றப்படும். மிகவும் உயரமான தேர் அலங்காரம் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு சுவாமி ஊர்வலம் மிகவும் அற்புதமாக இருக்கும்.

புதன் கிழமை  தேர் அலங்காரம். ஊர் உபயம் . இன்றும் மிகவும் சிறப்பான திருவிழாவாக இருக்கும். ஊர் மக்கள் தன்  சொந்த திருவிழாவாக நினைத்து படையல் செய்வார்கள். ஊர் உபயத்தன்று வாண வேடிக்கைகள் எல்லா நாட்களை விட அதிகமாக இருக்கும். புதன் இரவு அர்ஜுனன் தபசு உபயம்.  சிறப்பாக தபசு மரம் நடும் விழா நடைபெறும். முற்காலத்தில் அர்ஜுனன் வேடமிட்டவர்  அந்த மரத்தின் மேல் ஏறி பாரதம் படிப்பர் என சொல்வார்கள். தற்போது மரம் நட்டு  மரத்தின் அடியில் பூஜை செய்கிறார்கள். 

வியாழக்கிழமை முத்துப்பல்லக்கு. இன்று அம்மனுக்கு திருமண வைபவம் நடைபெறும். மாலையில் மாட்டு வண்டியில் பச்சை  ஓலை  முடிந்து கட்டி ஒவ்வொரு வீட்டிலிருந்தும் சாம்பார் சாதம் பெற்று செல்வார்கள். பீமன் வைபவம் முடிந்து வண்டியில்  முதலில் பெற்று சென்ற சாதம் ஒன்றாக கலந்து ஒவ்வொரு வீடாக கொடுத்து செல்வார்கள். இந்த பிரசாதம் வாங்க பக்தர்களிடையில் போட்டா  போட்டி இருக்கும்.

கல்யாண வைபவம் முடிந்து பல்லக்கில் சுவாமி ஊர்வலம் புறப்பட இரவு 12 மணி ஆகும். திரும்பி நிலைக்கு பல்லக்கு வர இரவு 2 மணி ஆகும். இன்று தான் இரண்டு கரகமும் சேர்ந்து பார்க்க முடியும். தீ மிதி அன்று சக்தி கரகம் மட்டும் தீ குழியில் இறங்கும். அதன் பிறகு அடுத்த ஆண்டுதான் இரண்டு கரகம்  பார்க்க முடியும். எனவே இரண்டு மணி வரைக்கும் முழு கரகாட்டம் பார்க்க கூட்டம் நிறைந்து இருக்கும். இன்றைய உபயமும், தீ மிதி உபயமும் தர்மகர்த்தா சார்பில் செய்வார்கள்.

வெள்ளிக்கிழமை அன்று தீ மிதி திருவிழா . இன்று வெளியூர்காரர்கள் மாவிளக்கு இடுவதும் , சல்லடை விளக்கு இடுவதும், அங்கப்பிரதட்சிணம் செய்வது என  விமரிசையாக நடைபெறும்.   நெடுஞ்சாலையில் வரிசையாக உள்ள புளியாமரத்தில் இருந்து கிளைகள் வெட்டிவந்து 2 மணி அளவில்  பூஜை செய்து தீ மூட்டுவார்கள். திருவிழாவிற்கு வருபவர்கள் எல்லோரும்  தீ கும்பத்தில் கற்பூரம் வாங்கி போடுவார்கள். 

காலையில் அரவான் பலி நடைபெறும். அரவான் தலை ஊரை  சுற்றி வந்து  துரியோதனன் கோட்டை வைபவம் நடைபெறும் இடத்தில் பிரதிஷ்ட்டை செய்யப்படும். மாலையில் துரியோதனன் கோட்டை இடிக்கும் வைபவம் நடைபெறும். பிறகு பீமன் அர்ச்சுனன்  சுவாமிகள்  அலங்காரம் செய்யப்பட்டு அரவான் தலை உள்ள இடத்தில் மண் கோட்டை கட்டி  அதன் நடுவில் துரியோதனன் வேடமிட்ட ஒருவர் தன்  புடை சூழ நின்று இருப்பர். பீமன் அர்ச்சுனன்  மூன்று முறை சுற்றி வந்து கோட்டை இ டிப்பார்கள்.

கோட்டை இடித்து சுவாமி வீதி சுற்றி வருவதற்குள் தீ குழியில் நெருப்பு கலைக்கப்படும். அரவானுக்கு உதிர சோறு கொடுக்கப்படும். பிறகு கோவில் மூலஸ்தானத்திலிருந்து படையல் செய்து தீ குழி  மூலையில் பிள்ளையார் பிரதிஷ்டை செய்து படைத்து தீக்குழியில் ஒரு பூப்பந்து உருட்டி விட்டு செல்வார்கள். இங்கு இதுதான் அதிசயம். சுவாமி வந்து  சக்தி கரகம்  கோவிலைவிட்டு வெளியில் வந்து கோவிலை சுற்றி வந்து தீ மிதி ஆரம்பிக்க குறைந்தது முக்கால் மணி நேரம் அல்லது ஒரு மணி நேரம் ஆகும். 




கரகம் தான் முதலில் தீக்குழியில் இறங்கும் , கரகத்துடன்  செல்பவர்தான் போட்ட பூப்பந்தை எடுத்துச்செல்வார். அதுவரை அந்த பூப்பந்து மலர்ந்தே இருக்கும். இது ஒவ்வொரு வருடமும் கண்கூடு. பூ வாடி விட்டால் அந்த வருடம் ஏதாவது அசம்பாவிதம் நடக்கும் என்பது நம்பிக்கை. எனவே தான் எல்லோரும் கவனிப்பார்கள்.  தீ மிதிக்கும் போது கோவிந்தா  கோவிந்தா என்ற சத்தம் விண்ணை முட்டும்.







கரகம் இறங்கியவுடன் பக்தர்கள் தீ மிதிக்க அனுமதிக்கப்படுவார்கள். குறைந்தது ஒவ்வொரு ஆண்டும் 1000 பேர்களாவது தீ மிதிப்பார்கள். பெண்கள் தீ மிதப்பது கிடையாது. பெண்கள் அங்கப்பிரதட்சினம் மட்டும் செய்வார்கள். தீ மிதி முடிந்தவுடன் கரகம், திரௌபதி அம்மன், அர்ச்சுனன் சுவாமிகள் வீதி உலா வந்து கரக ஆட்டம் முடிந்தவுடன் மூலஸ்தானத்தில் ஏளப்பண்ணப்படும். அப்போதுதான் முக்கியஸ்தர்கள் தங்களை ஆசுவாசபண்ணிக்கொள்வார்கள். 

மறுநாள் தெப்போற்சவம். அன்று மாலை மஞ்சள் நீர் உபயம் நடக்கும். முறை பெண்கள் ஆண்கள் மீது மஞ்சள் நீர் தெளித்து மகிழ்வார்கள். சுவாமிக்கு மஞ்சள்  நீர் தெளித்து ஊர்வலம் நடைப்பெறும். இரவு சுவாமி ஊர்வலத்திற்கு முன்பு காப்பு களைதல் நடைபெற்று பிறகு சுவாமிகள் தீர்த்த குலத்திற்கு எடுத்து செல்லப்படும். குளத்தில்  தெப்பம் இக்காலத்தில் சாத்தியமில்லை. ஏனெனில் அந்த அளவு குளத்தில் நீர் இல்லை. தீர்த்த குளத்தில் நீர் எடுத்து  மூர்த்தங்களுக்கு  மண்டகப்படி செய்து அர்ச்சனை செய்தவுடன்  தேரில் வைத்து வீதி ஊர்வலம் வரும். அன்றுடன் திருவிழா முடிவதால் நல்ல கூட்டம் இருக்கும். குறிப்பாக கடைகளில் நல்ல கூட்டம் இருக்கும். தேர் நிலைக்கு வந்தவுடன் சுவாமிகள் மூலஸ்தானத்தில் ஏளப்பண்ணப்படும். பக்தர்கள் தெருக்கூத்து பார்ப்பவர்கள் பார்த்துவிட்டு எல்லோரும் இனிய திருவிழா நினைவுகளை மனதில்  தாங்கி வீடு திரும்புவார்கள். வெளியூர்களிலிருந்து வந்த விருந்தினர்கள் தங்கள் ஊர் திரும்புவார்கள். 

சுபம் 
























































No comments:

Post a Comment

பிலவ ஆண்டு [2021] திருவிழா காட்சிகள் 24-05-2021 திங்கள்கிழமை

                பிலவ ஆண்டு [2021] திருவிழா காட்சிகள்    24-05-2021                                                         திங்கள்கிழமை     ...